சென்ற வெள்ளிக்கிழமையுடன் 2013ம் ஆண்டுக்கான பாடசாலைக் கல்வியாண்டு நிறைவு பெற்று 3ம் தவணை விடுமுறை ஆரம்பமாகியுள்ளது. எமது கல்லூரியில் மாணவர்களுக்கான தேர்ச்சியறிக்கை வழங்கல், புதிய பாடப்புத்தகங்கள் விநியோகித்தல், உச்சப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகள் வழங்கல், வங்கிகளில் வைப்புக்களைப் பேணும் மாணவர்களுக்கான அன்பளிப்புக்களை வழங்கல் எனப் பல்வேறு நிகழ்வுகள் காலைப் பிரார்த்தனையைத் தொடர்ந்து நடைபெற்றன. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது சித்தன்கேணி சிவன் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ.ச.வாசுதேவக் குருக்கள் மாணவர்களுக்கு ஆசி வழங்கினார். அனைத்து ஆசிரியர்களும் பெருமளவு பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பரீட்சை விடைத்தாள்களைப் பார்வையிட்டதுடன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் அறிந்து கொண்டனர். அடுத்த புதிய கல்வியாண்டு 02-01-2014ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.